7.5% இடஒதுக்கீட்டில் #MBBS கனவை நனவாக்கிய கூலித் தொழிலாளியின் மகன்!
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவர் வெங்கடாசலம் (60) என்பவர் கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (54). இந்த தம்பதியின் மகன் சுரேந்திரன் (18). வெங்கடாசலத்தின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால், செல்வியின் சகோதரி பாக்கியம் (58), சுரேந்திரனை தனது பாதுகாப்பில் வளர்த்து வந்துள்ளார். தையல் வேலை செய்து வரும் பாக்கியம், 1-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை சுரேந்திரனை படிக்க வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : #B.Ed வினாத்தாள் கசிந்த விவகாரம் – திரும்பப் பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு!
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சுரேந்திரன் 524 மதிப்பெண் பெற்றார். இதைத் தொடர்ந்து, அவரது மருத்துவர் கனவை நிறைவேற்ற தனியார் ‘நீட்’ பயிற்சி மையத்தில் அவரை பாக்கியம் சோ்த்துள்ளார். அண்மையில் வெளியான ‘நீட்’ தோ்வு முடிவில் சுரேந்திரன் 720-க்கு 545 மதிப்பெண் பெற்றார். இதைத் தொடர்ந்து, அவருக்கு அரசுப் பள்ளி மாணவர் இடஒதுக்கீட்டில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.
இது குறித்து சுரேந்திரன் கூறுகையில், "நீட் தோ்வு என்பது கடினமானது அல்ல. புரிந்து படித்தால் வெற்றி பெறலாம்" என தெரிவித்தார்.