'சிக்கந்தர்' படத்திற்கு பின்னணி இசையமைக்கும் #SanthoshNarayanan?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு வெளியான 'தீனா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படமே அவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது. இதனையடுத்து அவர் விஜயகாந்த்தை வைத்து 'ரமணா' படத்தை இயக்கினார். இப்படமும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த் அந்தப் படத்தில் வேறொரு பரிமானத்தில் நடித்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து அவர் கத்தி, சர்கார், தர்பார் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானார். இவர் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது 'புராணக் கதை' படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார்.
இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சிக்கந்தர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'SK 23' என்ற திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.