ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லா தர்ஹாவில்
850-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் அமைந்துள்ள சுல்தான் செய்யது இப்ராகிம்
பாதுஷா ஷஹுது ஒலியுல்லா தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடுத்
திருவிழா ஒருமைப்பாட்டு விழாவாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 850-வது சந்தனக்கூடு மத நல்லிணக்கவிழா தர்ஹா ஹக்தார்கள் முன்னிலையில் கடந்த 9-ம் தேதி மவுலீது ஷெரிப் (புகழ் மாலை) மற்றும் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கப்பட்டது.
முன்னதாக, இந்து சமுதாய மீனவப் பெண்கள் கடல் தண்ணீரை கொண்டு வந்து ஏர்வாடி
தர்காவைச் சுத்தம் செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. அதன்படி மீனவப்
பெண்கள் கடல்நீரை குடங்களில் ஒரு கிலோ மீட்டர் தலையில் சுமந்து வந்து தர்ஹாவில்
உள்ள அனைத்து இடங்களையும் சுத்தம் செய்தனர்.
உலமாக்கள், தர்ஹா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்ஹா மண்டபத்தில் மாவட்டத் தலைமை அரசு காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு துவா ஓதினர். தொடர்ந்து 18-ம் தேதி தர்ஹா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இப்ராகிம்
லெவ்வை மகாலில் இருந்து, கொட்டு முழக்கங்களுடன் குதிரை நாட்டியத்துடன்
ஒட்டகம் மீது கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்ஹா
வந்தடைந்தது. நாரே தக்பீர் என்ற முழக்கத்துடன் கொடி மரம் ஏற்றப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
மேலும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மத நல்லிணக்க சந்தனக்கூடுத் திருவிழா வருகிற 31-ம் தேதி மாலை ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 1-ம் தேதி அதிகாலை தர்ஹாவுக்கு
சந்தனக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும்
நிகழ்ச்சி நடைபெறும். சந்தனக்கூடு விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில்
ஜூன் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து கொடியிறக்கத்துடன், யாத்ரீகர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும். இந்த விழாவிற்குத் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா,
மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து
கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.