#Samsung ஊழியர்கள் வேலைநிறுத்தம் | இன்று மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை!
சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று காலை நடைபெற்ற 6-ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9ம்தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 1500-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : MarinaAirShow | “5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
இந்நிலையில், சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை ஆணையர் கமலக்கண்ணன், இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்கவில்லை. இதனால்,6ம் கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டாமால் முடிவிடைந்தது.
இதனிடையே, இன்று மாலை 3 மணியளவில் அமைச்சர்கள் குழு தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.