சாம்சங் ஊழியர்கள் பணியிடை நீக்கம் - 2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்!
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதையடுத்து பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக போராட்டம் கைவிடப்பட்டு, தொழிற்சங்க பதிவுக்காக சிஐடியு-வின் சட்டப்போராட்டம் நடத்தியது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை விரைவில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்பு அண்மையில் சிஐடியு தொழிற் சங்கம் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சாம்சங் இந்தியா நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சிஐடியு தொழிற்சங்கத்தின் நிர்வாகி குணசேகரனை கடந்த ஜன.04-ம் தேதி பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து அடுத்தநாள் மோகன்ராஜ், சிவநேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் (பிப்.06) 500 க்கும் மேற்பட்ட சிஐடியு ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.