தண்ணீரின்றி கரும் சம்பா பயிர்கள் - விவசாயிகள் வேதனை!
திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி, சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட
பரப்பளவில் சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் சுமார் 80 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் சென்று சேராததால் பல்வேறு பகுதிகளிலும் குறுவைப் பயிர்கள் கருகியது. இதனால் விவசாயிகள் டிராக்டர் எந்திரம் மூலம் பயிரை அழித்துவிட்டு சம்பா சாகுபடி செய்யலாம் என்று சம்பா நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்திருந்தனர்.
இந்தநிலையில், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் தர முடியாது மறுத்து விட்டது. சம்பா பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நேரத்தில் தண்ணீர் இல்லை மழையும் பொய்த்து போய்விட்டது. இதனால் தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூபி.காமராஜ்