அதே ஃபீல்.. அதே எமோஷன்.. - தெலுங்கிலும் பட்டய கிளப்பும் மஞ்சும்மல் பாய்ஸ்!
அதே ஃபீல்.. அதே எமோஷனுடன் தெலுங்கிலும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பட்டைய கிளப்பியுள்ளது. பல திரையரங்குகளில் காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளன.
‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…’ சமூக வலைதளங்களில் தற்போது இந்த பாடல்தான் ட்ரெண்டிங். காரணம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம். மலையாளத்தில் வெளியாகி, கேரளாவை விட தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தியது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.
கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படம், தமிழ்நாட்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ‘மஞ்சும்மல்’ என்ற சின்ன கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறது. அதில் ஒருவர் குணா குகையில் தவறி விழுந்து விடுகிறார். அவரை அவரது நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் கதை.
ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. மலையாள சினிமாவில் அதிவிரைவில் ரூ.100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையையும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பெற்றது. உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் மலையாள படம் என்கிற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மட்டும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து வரலாறு படைத்துள்ளது.
திரையரங்கில் சக்கைப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை சிதம்பரம் இயக்கி இருந்தார். இந்த நிலையில் இத்திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நேற்று திரையரங்கில் வெளியானது.
தெலுங்கிலும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மலையாளத்தை கடந்து தமிழிலும் எப்படி இப்படி உணர்ச்சிப்பூர்வமாக கனெக்ட் ஆனதோ அதே ஃபீல் மற்றும் அதே எமோஷனுடன் தெலுங்கிலும் ரசிகர்கள் மத்தியில் வரவற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் பல திரையரங்குகளில் இப்படத்திற்கு ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதாக பலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.