மும்மத மக்கள் வழிபடும் பழைய பள்ளி திருத்தலத்தில் சம்பந்தி விருந்து!
கன்னியாகுமரி மாவட்டம் பழமை வாய்ந்த பள்ளியாடி பழைய பள்ளி மும்மத
திருத்தலத்தில் இன்று மத நல்லிணக்க சமபந்தி விருந்து நடைபெற்றது.
இரவிபுதூர்கடையை அடுத்த பள்ளியாடியில் பழைய பள்ளி அப்பா திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் மத நல்லிணக்க தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டாண்டு காலமாக மும்மத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்று வருகிறது. இந்த திருத்தலத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புளிய மரத்தின் அருகில் விளக்கு அமைந்துள்ளது. இந்த விளக்கில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் என மும்மத அடையாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தலத்தில் தீப ஒளியினால் இறைவனை வழிபடுவது சிறப்பு அம்சமாகும். அந்த வகையில் இந்துக்கள் விளக்கேற்றியும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தியும், முஸ்லிம்கள் தூபம் காட்டியும் அவரவர் முறைப்படி வணங்குகின்றனர். இந்நிலையில் பழைய பள்ளி அப்பா திருத்தத்தில் முப்பெரும் விழா நேற்று சர்வ மத பிரார்த்தனையுடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.