திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா சமக தலைவர் சரத்குமார்?
தொகுதி பொறுப்பாளர்களே வேட்பாளர்களாக வாய்ப்பு என சமக தலைவர் சரத்குமார் பேசிய நிலையில் திருநெல்வேலி தொகுதி பொறுப்பாளராக சரத்குமார் அறிவிக்கப்பட்டிருப்பது, அவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கடந்த 56 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் சென்னையில் நீர்த்தடங்களை சிறப்பாக செயல்படுத்தவில்லை பராமரிக்க வில்லை. இலவசங்கள் வழங்குவதை தவிர்த்து அடிப்படை பிரச்சினைகள் குறித்து பணியாற்றி இருந்தால் இந்த நிலை சென்னைக்கு ஏற்பட்டிருக்காது. 56 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆண்டுவிட்டனர். சென்னையின் தற்போதைய நிலைய இன்று மக்கள் விமர்சித்து கொண்டிருக்கின்றனர். பெரு மழை நேரத்தில் மக்கள் தங்களுக்கு எதுவும் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பணம் கொடுத்தால் தேர்தல் நேரத்தில் மாறிவிடுகின்றனர். ஜனநாயகம் மாறி பணநாயகம் வந்துவிட்டது. நாங்கள் அமைதியான ஆழமான ஆறு. காட்டாற்று வெள்ளம் அல்ல.
2026 தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுகிறோம். அப்போது எங்களை பற்றி தெரியும் - 2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் எங்களது இலக்கு அல்ல 2026 சட்டமன்ற தேர்தலில் எங்களது இலக்கு அதில் வெற்றி பெற்று சமத்துவ மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நான் முதலமைச்சராக பதவி ஏற்பேன். 2024 ஆண்டு நமது இலக்கு இல்லை என்றாலும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அனைவரும் அங்கு வந்து உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெற வைப்போம்.
7 கோடியே 28 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கடன் உள்ளது. இதனை எப்போது அடைக்க போகிறார்கள் கொடி பிடிப்பதற்கும், கோஷம் போடுவதற்கும் தொண்டர்களாக இளைஞர்களை பயன்படுத்தி வருகின்றனர். திராவிட இயக்கங்கள் ஆட்சி தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களை விரட்டி விட்டு அதிக அளவில் தமிழகத்தில் குடியேறி வரும் வட இந்தியர்கள் வாக்களித்து அவர்களே வெற்றி பெற்று விடுவார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் நான் தென்காசி தொகுதியில் நிற்க வேண்டும் என்றால் 30 கோடி ரூபாய் வேண்டும். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நிற்க வேண்டும் என்றால் 100 கோடி ரூபாய் வேண்டும். அதுபோன்ற நிலை அரசியலில் தற்போது ஏற்பட்டு விட்டது.
நாம் அடுத்த தலைமுறை பற்றி யோசனை செய்து வருகிறோம். திராவிட கழகங்கள் அடுத்த தேர்தலை நினைத்து ஆட்சி செய்து வருகின்றனர். செம்பரபாக்கம் ஏரி செல்லும் பாதைகளை தூர்வாரி இருக்க வேண்டும் ஆனால் அதனை ஆளும் அரசுகள் செய்யவில்லை. மாறாக இலவசங்களை வழங்கி வருகின்றனர். இலவசங்களை தவிர்ப்பது தான் பொருளாதர வளர்ச்சிக்கு அடையாளம்.
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு மதிப்பு ஏற்படுத்தியது மோடி அரசு. உலகத்தின் பார்வையில் இந்தியாவை உயர்த்தியது மோடி ஆட்சி. 2026 தேர்தலில் வென்று சமத்துவ மக்கள் கட்சி ஆட்சியில் ஒரு பைசா இலவசத்திற்கு இடமில்லை. இட ஒதுக்கீடு மட்டும் தொடரும், படிப்பு, மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்.
சென்னை வெள்ளம் குறித்து பேசுவதால் கமல்ஹாசன் கோபித்து கொள்ளகூடாது - குறை சொல்லும் நேரம் இது இல்லாவிட்டாலும், நிறை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி நாங்கள் சொல்லி வருகிறோம். அரசியலில் இருந்து தான் நான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது எனக்கு இல்லை. நல்லாட்சி வர வேண்டும் என்றால் பண நாயகம் ஒழிந்து ஜனநாயகம் வர வேண்டும். கூட்டம் முடிந்து டாஸ்மாக்கை நோக்கி தொண்டர்கள் சென்றால் அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிடுவேன். கட்சிக்காக உழைத்து செலவழித்து நான் தற்போது கடன்காரனாக நிற்கிறேன். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் நாளை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகி ஆட்சியில் பங்கு பெற வேண்டும்.
தொடர்ந்து கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக சரத்குமாரை அறிவித்தார். அவருக்கு இரண்டு லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதியின் சமத்துவ மக்கள் கட்சி பொறுப்பாளர்களை சரத்குமார் அறிவித்தார்.
பொறுப்பாளர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்பு என சரத்குமார் பேசிய நிலையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக சரத்குமார் அறிவிக்கப்பட்டிருப்பது, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதை சூசகமாக அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது.