சென்னையில் பட்டப்பகலில் பைக் திருட்டு - திருடனை தேடும் வேட்டையில் காவல்துறையினர்!
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள முனியபிள்ளை சத்திரம் அண்ணா சாலையில் அமைந்துள்ள தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் சுபாஷ். இவரின் சிவப்பு கலர் ஆக்டிவா வாகனத்தை கேஸ் அலுவலகத்திற்கு முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்று வந்து பார்த்தபோது வண்டியை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக சிசிடிவியை பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி சிசிடிவியில் இருந்தது. அதிர்ந்துபோன சுபாஷ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் சைதாப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை மடக்கி ஆவணங்களை பரிசோதித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரண்பாடான பதில் அளித்ததால் போலீசிற்கு சந்தேகம் ஏற்பட்டு வாகனத்தின் அசல் ஆவணங்களை கொண்டு வந்தபின் வண்டியை எடுத்து செல் என கூறி வண்டியை பிடிங்கி திருடனை திருப்பி அனுப்பி உள்ளனர்.
பின்னர் போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திருட்டு வண்டி என தெரிந்தது. மேலும் திருடனின் விலாசம் தொலைபேசி எண் என விசாரித்த போது அங்கு வசிப்பதும் இல்லை தொலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டுள்ளதை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.