மண்டல பூஜைக்கு தயாராகும் சபரிமலை!... நாளை மாலை கோயில் நடை திறப்பு...
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
16ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்குகின்றன. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டலகாலம் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரிகள் கண்டரர் ராஜீவரர், பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார்.
இதன்பின்னர் நெய் தேங்காய்களை எரிக்கும் ஆழியில் தீ மூட்டப்படும். தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். சபரிமலை கோயில் மேல்சாந்தியாக கொல்லத்தைச் சேர்ந்த அருண்குமார் நம்பூதிரியும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக கோழிக்கோட்டை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரியும் பொறுப்பேற்பார்கள். நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
கார்த்திகை 1ம் தேதியான நாளை மறுநாள் (16ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். புதிய மேல்சாந்திகளான அருண்குமார் நம்பூதிரி சபரிமலை கோயில் நடையையும், வாசுதேவன் நம்பூதிரி மாளிகைப்புரம் கோயில் நடையையும் திறப்பார்கள். அடுத்த ஒரு வருடத்திற்கு இவர்களது தலைமையில் தான் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களின் முக்கிய பூஜைகள் நடைபெறும். கடந்த 2018ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த வருடம் முதல் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மண்டல காலத்திலும் பம்பை ஹில்டாப் மற்றும் சக்குபாலம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.