ரஷ்ய அதிபர் தேர்தல் | 88% வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராகிறார் விளாடிமிர் புதின்!
ரஷ்ய அதிபர் தேர்தலில் 88 சதவிகித வாக்குகள் பெற்று விளாடிமிர் புதின் மீண்டும் அதிபராகிறார்.
ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இத்தேர்தலில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன.
முதன்முறையாக ரஷ்ய வரலாற்றில் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இந்நிலையில் அதிபர் தேர்தலில் 87.8 சதவீத வாக்குகள் பெற்று விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான விளாடிமிர் புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷ்யாவின் அதிபராக நீடிப்பார்.
ரஷ்ய வரலாற்றில் ஸ்டாலினுக்குப் பிறகு அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெறுமையை விளாடிமிர் புதின் பெற்றுள்ளார். உக்ரைனுக்கு எதிராக 2 வருடங்கள் போர் நடைபெற்று வருவது, எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. ஆனால் அதையும் தாண்டிய புதின் வெற்றி பெற்றுள்ளார்.