டிசம்பர் 04ல் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 04ல் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த பயணத்தின் போது இந்தியா-ரஷ்யாவின் 23வது உச்சிமாநாட்டில் பங்கற்கிறார். அடுத்ததாக புது டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் புதின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அளிக்கும் விருந்திலும் பங்கேற்கிறார்.
இந்த அரசு முறைப் பயணமானது இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் இந்தியா மற்றும் ரஷ்யாவின் தலைமைக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்” என்று தெரிவிக்கபபட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் கடைசியாக 2021 இல் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.