உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் - 21 பேர் உயிரிழப்பு... 83 பேர் காயம்!
உக்ரைனின் சுமி நகரத்தில் இன்று காலை 10:15 மணியளவில் ஞாயிறு குறுத்தோலையை கொண்டாட மக்கள் கூடியிருந்தபோது, நகரின் மையப்பகுதியை இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கின. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு குழந்தைகள் உட்பட 83 பேர் காயமடைந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார். மேலும் இரட்டை ஏவுகணைத் தாக்குதலில் “டஜன் கணக்கானவர்கள்” கொல்லப்பட்டதாகக் கூறினார். “முதற்கட்ட தகவல்களின்படி, டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர். சாதாரண மக்களின் உயிரைப் பறிக்கும் மோசமான குப்பைகளால் மட்டுமே இதுபோல் செயல்பட முடியும்” என ரஷ்யாவை கடுமையாக சாடினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே தொடங்கிய போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்குக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா போன்ற நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இரு நாடுகளும் மாறி மாறி போர் தொடுத்த வண்ணமே உள்ளன.