புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா தகவல்... 2025 முதல் இலவச விநியோகம்!
புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இது ஒரு mRNA தடுப்பூசி. இந்த தடுப்பூசி ரஷ்யர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட இரண்டு நாட்களில் நோயாளிகளின் உடலில் வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும். ஆனால் இந்த தடுப்பூசி எவ்வகையான புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும், அது எவ்வாறு செயல்படும் என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
ரஷ்யாவில் புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. 2022இல் மட்டும் 635,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடல், மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் ரஷ்யர்களிடையே பொதுவாக ஏற்படுகிறது. மேலும் இந்த புற்றுநோய் தடுப்பூசி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்குமே தவிர புற்றுநோயை கட்டுப்படுத்தாது.