உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா - 6 பேர் பலி!
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது நேற்று இரவு நடந்த ஏவுகணைத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகினர்.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன.
பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 143 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 பேர் பலியாகியதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும், மேயர் இகோர் டெரிகௌவ் தெரிவித்தார்.
ரஷ்யா 6 ஏவுகணைகள் மற்றும் 32 ஷஹீத் ரக ட்ரோன்களை நேற்று இரவு உக்ரைனில் ஏவியது என்று உக்ரைன் விமானப்படைத் தளபதி மைகோலா ஓலிசக் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனின் கார்கிவ் நகர் மீதான தாக்குதல்களை அண்மை நாட்களில் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.