தமிழ்நாடு இளம் வீரர்கள் 10 பேருக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி - ‘ஆறுசாமி’ துபேக்கு குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ்நாடு விளையாட்டுப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நிகழாண்டு (2024-25) விழா சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார். அவரை டிஎன்எஸ்ஜேஏ தலைவர் வெங்கட் வரவேற்றார். மேலும் காசி விஸ்வநாதன் அழைப்பில் சென்னை அணியின் கிரிக்கெட் வீரர் சிவம் துபேவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து சிவம் துபே டிஎன்எஸ்ஜேஏ சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வீரர்களுக்கு உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டைப் போல மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற ஊக்கத்தொகைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு வீரர்கள் 10 பேருக்கும் தனிப்பட்ட முறையில் தலா ரூ.70 ஆயிரம் வீதம் ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கினார் சிவம் துபே. இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.