தினமும் 3.50 லட்சம் தயாரிப்பு....ஆண்டுக்கு ரூ.500 கோடி வர்த்தகம் | தனி சாம்ராஜ்ஜியம் நடத்தும் #ThirupatiLaddu!
திருப்பதி தேவஸ்தானம் நாள் ஒன்றுக்கு 3.50 லட்சம் லட்டுக்களை தயார் செய்கிறது. இதன் மூலம் வருடத்திற்கு ரூ.500 கோடி வருமானம் ஈட்டுகிறது.
பக்தர்களால் மிகவும் விரும்பி வாங்கி செல்லப்படும் கோயில் பிரசாதங்களில் ஒன்று திருப்பதி லட்டு. 300 ஆண்டுகளுக்கு முன், ஏழுமலையான் கோயிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக பூந்தி வழங்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து 1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் பூந்திக்கு பதிலாக, லட்டு பிரசாதம் வழங்கும் நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டு, இப்போது வரை பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் காப்புரிமை வழங்கப்பட்டது. எனவே இந்தியாவில் யாரும் திருப்பதி லட்டு என்ற பெயரில் லட்டு உற்பத்தி செய்யவோ விற்பனை செய்யவோ இயலாது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக தேவஸ்தானத்தில் ஒரு தனி துறையே செயல்படுகிறது. அந்த துறை பக்தர்களுக்கு தடங்கல் இல்லாமல் பிரசாதம் கிடைக்கும் வகையில் தினமும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் லட்டுக்களை தயார் செய்கிறது. லட்டு விற்பனை மூலம் மட்டும் திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் பெறுகிறது.
ஏழுமலையான் கோயிலில் மூன்று வகையான லட்டுக்கள் தயார் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்று பக்தர்களுக்கு கவுண்டர்களில் விற்பனை செய்யப்படும் 175 கிராம் எடையுள்ள லட்டு. இது புரோக்தம் லட்டு என அழைக்கப்படும். இது அதிகளவில் தயார் செய்யப்படுகிறது.
அஸ்தானம் என்ற லட்டு விசேஷ நாட்களில் தயாரிக்கப்படுகிறது. 750 கிராம் எடையுள்ள இந்த லட்டு குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்கள் என முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
கல்யாண உற்சவ லட்டு, கல்யாண உற்சவம் ஆர்ஜித சேவைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த லட்டுக்கு பக்தர்களிடையே கடும் கிராக்கி உள்ளது. இதனால் கல்யாண உற்சவ லட்டை பெற பக்தர்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கின்றனர். புரோகிதம் லட்டைவிட குறைந்த அளவே இது தயாரிக்கப்படுகிறது.