Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேசத் தரத்தில் மேம்படுத்திட ரூ.25 கோடி நிதி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

08:45 PM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேசத் தரத்தில் மேம்படுத்திட ரூ.25 கோடி! நிதி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அரசு தரப்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டு இளைஞர்களிடையே விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும், தமிழ்நாட்டில் சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தனிக் கவனம் செலுத்துவதற்காக முதன் முதலில் விளையாட்டுத் துறைக்கென ஒரு தனி அமைச்சர் பதவியை 9-12-1999 அன்று ஏற்படுத்தியும், தலைமைச் செயலகத்தில் விளையாட்டுத் துறையை ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின்கீழ் தனித்துறையாக 2000 ஆண்டு ஜூன் திங்களில் ஏற்படுத்தியும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, 2021இல் பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுக் கட்டமைப்புகளை ஒவ்வொரு விளையாட்டுக்கும் தமிழ்நாட்டில் ஏற்படுத்திட வேண்டும் என்று முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்கள்.

அதற்கு ஏற்ப இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தமிழ்நாட்டின் விளையாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றுகிறார்கள். முதலமைச்சர் முதல் கட்டமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டு மத்திய அரசின் ஒப்புதலோடு பிரதமர் மோடியை அழைத்து 2022ஆம் ஆண்டில் 44வது செஸ்ஒலிம்பியாட் போட்டிகளை மாமல்லபுரத்தில் நடத்தியது உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடும் உழைப்பால் அண்மையில், கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகள், நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு ஏறத்தாழ 5,000த்திற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந்தப் போட்டியில் 38 தங்கப் பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு பதக்கப்பட்டியலில் 2-ஆம் இடம் பெற்று, மாபெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் இந்த அரசும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் விளையாட்டுக் கலை வளர்ச்சிக்கு அளித்து வரும் அளப்பரிய ஊக்கமும் ஒத்துழைப்புமே காரணம் ஆகும்.

2023 2024 ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், சென்னையில் உள்ள ஐந்து முக்கிய விளையாட்டரங்கங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும் என அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில் சென்னை மாநகரில் உள்ள 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான விளையாட்டு உட்கட்டமைப்புகளைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தி மேம்படுத்திட மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் 5 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவர்ஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் 2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலும், வேளச்சேரி நீச்சல்குளம் வளாகம் 4 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டிலும் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட மொத்தம் 25 கோடி ரூபாய் நிதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது இந்திய விளையாட்டுத்துறையின் தலைமையகமாக தமிழ்நாட்டை உருவாக்கிட முனைந்திடும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உயர்ந்த நோக்கத்திற்கு ஒரு சீரிய சான்றாகும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiCMO TamilNaduMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesSports InfrastructureUdhayanidhi stalin
Advertisement
Next Article