“போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!” - காவல் துறையினர் தகவல்
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
முதலில் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது:
போதை பொருட்களை தடுக்க தமிழக காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.போதைக்கு எதிரான குழுவை (Anti-Drugs Clubs) சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் போதை பொருட்கள் எதிராக ஆலோசனை நடத்தினோம். போதை பொருள் தொடர்பில் இருந்த நடவடிக்கையில் ஈடுபட்டு 825 வெளி மாநில நபர்களை கைது செய்துள்ளோம். 2 ஆண்டுகளில் போதை பொருட்கள் மூலமாக சம்பாதித்த 18.44 கோடி மதிப்பிலான 47 அசையும், அசையா சொத்துகள், 6,124 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு போதை பொருட்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. டிரக்ஸ் பிரி தமிழ்நாடு உருவாக்க ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை அடுத்து 2022 ஆம் ஆண்டு 28,383 கிலோ கஞ்சா, 14,934 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் அதிகளவு குற்றவாளிகளை பிடித்துள்ளோம். 976 மருந்தகங்களில் சோதனை நடத்தி 164 மருந்தகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அதில் 9 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த மூன்றாண்டுகளில் 1,501 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட 18,830கிலோ போதை பொருட்கள் அழித்துள்ளோம். போதை பொருட்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. போதைக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வும் வழங்கி வருகிறோம்.
கஞ்சாவை தடுக்கும் போது போதை மாத்திரைகளுக்கு மாறியுள்ளார்கள், அதை அறிந்து உடனே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மருந்தகங்களில் போதை மாத்திரைகள் வாங்கினார்கள் அதை தடுத்தோம். கொரியர் மூலமாக போதை மாத்திரைகள் வாங்கும் பழக்கம் உருவானது, அதையும் தடுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜாபர் சாதிக் தொடர்பான விவரங்கள் கேட்டு தமிழக காவல்துறையிடம் மத்திய போதை பொருள் அதிகாரிகள் இதுவரை எதுவும் கேட்கவில்லை.கேட்டால் அனைத்து விவரங்களையும் தமிழக காவல்துறை தர தயார்.
சூடோபெட்ரின் போதை பொருள் ஒரு கிலோவின் மதிப்பு 6000 ரூபாய் தான்,
50கிலோவின் மதிப்பு குறைவுதான். ஆனால் தவறான தகவல் பரவி வருகிறது.மத்திய ஏஜென்சிகள் போதை பொருள் பறிமுதலை விட, தமிழக காவல்துறை பறிமுதல் செய்த எண்ணிக்கை அதிகம்.
புரோட்டான் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்ச்சியாக, முதலில் தகவலை கேட்டோம் தரவில்லை, பின்னர் மத்திய தகவல் தொழில்நுட்ப பிரிவு வாயிலாக கேட்டோம், தற்போது தகவல் தருகிறார்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுவோம். இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் பேசினார்.