Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூ.12,800 கோடி முதலீடு #EPS ஆட்சியில் ஆந்திராவுக்குத் தாரை வார்க்கப்பட்டது - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

07:41 AM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

Advertisement

https://twitter.com/TRBRajaa/status/1838246127335866714

அதில் அவர் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊடகத்தினரிடம் பல முறை விளக்கம் அளித்திருக்கிறார். சட்டமன்றத்தில் தொழில் துறை மானிய கோரிக்கையில் நானும் புள்ளிவிவரங்களோடு விளக்கம் அளித்த பிறகும், எடப்பாடி பழனிசாமிக்கு விவரங்கள் புரியவில்லை. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பவே முடியாது.

'இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட குறைவான முதலீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்' என அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சொந்தமாக சிந்திக்க தெரியாமல், இன்னொரு அரசியல் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் இருந்து காப்பி அடித்து அதே கருத்தை சொல்லியிருக்கிறார் பழனிசாமி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்க பயணத்தில் ரூ.7,616 கோடி புதிய முதலீடாக ஈர்க்கப்பட்டு, 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOU) போடப்பட்டுள்ளன. இன்னும் கூடுதலான முதலீடும், அதிகம் பேருக்கான வேலைவாய்ப்புகளும் உறுதி செய்வதற்கான முதல் கட்ட பணிகள் முடிந்திருக்கின்றன. முதல் கட்ட பணிகள் என்றால், அது ஆரம்பம் மட்டுமே. இன்னும் புரியும்படி சொல்வது என்றால் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் முதலீடுகள் செய்ய முன் வந்த அனைத்து நிறுவனங்களோடும் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடவில்லை. உறுதியாக யார் யார் பணியை துவக்குவார்கள் என்பதை பல வகையில் உறுதி செய்து, அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பரவலாகப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்படுமா என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

அதாவது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சொன்னதைப் போல அமெரிக்க பயணத்தின் அனைத்து ஒப்பந்தகளும் நூறு விழுக்காடு நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக இருக்கிறது. ஊடகங்களும் அதனை உறுதி செய்து, கட்டுரைகளை வெளியிட்டிருக்கின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த புள்ளிவிவரங்களை ஒப்பிடும்போது ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பல மாநிலங்கள் யார் அவர்களை அணுகினாலும், முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கும் போதே முதலீடுகள் வருவதாக அறிவித்து விடுகிறார்கள். ஆனால், தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் போடுவதற்கு முன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி, பெரும்பாலும் உறுதியாக முதலீடு வந்து சேரும் என கணித்த பின்னரே ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆகவே தான், நமது ஒப்பந்தங்களின் நிறைவேறும் விகிதம் மற்ற மாநிலங்களைவிட கூடுதலாக உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு எவ்வளவு என்பதை விட அவை எந்த அளவிற்கு முதலீடாக மாற்றப்படும்? வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாமா? நூற்றுக்கணக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MOU) எல்லோராலும் போட முடியும். நம்மாலும் மிக எளிதில் பழனிச்சாமி அமெரிக்கப் பயணத்தின் போது போட்டதை போல வெற்று ஒப்பந்தங்கள் போட்டிருக்கமுடியும். அது பலன் தருமா என யோசிக்க வேண்டாமா? உறுதியாக முதலீடாக மாறும் வாய்ப்பு அதிகமுள்ள நிறுவனங்களுடன் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே பலன் தரக் கூடியவை என்பது ஏன் பழனிசாமிக்கு தெரியவில்லை?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்று உலக புகழ்பெற்ற ஃபோர்டு நிறுவனம் தனது ஆலையை மீண்டும் துவங்கப் போவதாக அறிவித்திருப்பதெல்லாம் பழனிசாமி கண்களுக்கு சாதனையாக தெரியவில்லையா? அதிமுக ஆட்சியில் முதலீட்டை ஈர்த்த லட்சணத்திற்கு உதாரணம் கியா மோட்டார்ஸ் ஒன்றே போதும். தமிழ்நாட்டில் தன் தொழிற்சாலையை அமைக்க இருந்த தென் கொரியாவின் கார் நிறுவனமான கியா மோட்டார்ஸ், தன் முடிவை மாற்றிக் கொண்டு, 2017-ல் ஆந்திராவுக்குப் போனது. தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.12,800 கோடி முதலீடு பழனிசாமி ஆட்சியில் ஆந்திராவுக்குத் தாரை வார்க்கப்பட்டது. அந்தத் தொழிற்சாலை கைவிட்டுப் போனதால், தமிழ்நாட்டின் 10,000 இளைஞர்களுக்குக் கிடைக்க இருந்த வேலைவாய்ப்புகள் பறிபோனது. கியா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் அமைந்திருந்தால், அதற்கு உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்க, அதைச் சுற்றி பல நூறு சிறு-குறு துணைத் தொழிற்சாலைகள் உருவாகியிருக்கும். அதன் மூலமும் மேலும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும். அத்தனையும் இருண்ட அதிமுக ஆட்சியால் இழந்தோம்.

எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போது தொழில் துறை மானிய கோரிக்கையில் நான் கியா மோட்டார்ஸ் பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பிய போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. 'கியா மோட்டார்ஸ் எங்கும் செல்லவில்லை. தமிழ்நாட்டில் தான் இருக்கும்' என அடித்து சொன்னார். ஆனால் நடந்தது என்ன? ஜெயலலிதா சொன்னது பொய்யானது. கடைசியில் நான் சொன்னதுதான் உண்மையானது. கியா மோட்டார்ஸ் ஆந்திராவின் அனந்தப்பூர் போனதற்கு என்ன காரணம் என பழனிசாமியால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?

எதிர்க்கட்சித் தலைவர் தனது அரசியல்ரீதியான அறிக்கையில், அரசு பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு குற்றம்சாட்டுவது என்பது முதல்வராக இருந்தவருக்கு அழகல்ல. அதிமுக ஆட்சியில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் துறை சார்ந்த 197 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 2,59,534 கோடி ரூபாய் முதலீடுகள் வந்து சேரும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுநாள் வரை 86,190 கோடி ரூபாய் தொகைதான் ஈர்க்கப்பட்டுள்ளது. அதாவது 33 விழுக்காடுதான். அதுவும் 2021 திமுக ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய அதிமுக அரசு போட்ட ஒப்பந்தங்கள் என்ற காழ்ப்புணர்சியோடு நடக்காமல் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுத்ததன் விளைவாகத்தான் இந்த 33 விழுக்காடு அளவிற்காவது வந்து சேர்ந்தது.

2021-ல் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு இதுவரை ரூ.10,06,709 கோடி முதலீட்டுக்கான 891 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. அதாவது 60 விழுக்காடு அளவுக்கு இப்போதே எட்டியிருக்கிறோம். 234 ஒப்பந்தங்கள் மூலம் உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டன. 301 ஒப்பந்தங்கள் மூலம் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

இது திராவிட நாயகன் ஆட்சியின் வரலாற்று சாதனை. பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தும் செய்யாத இந்த சாதனையை மூன்றாண்டுகளிலேயே செய்து காட்டியிருக்கிறோம். இது இந்திய முதலீட்டு வரலாற்றிலேயே நடக்காத சாதனை!

திமுக ஆட்சியில் நடந்த 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதில் 403 ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டு பலர் உற்பத்தியையும் மேலும் பலர் கட்டுமானப் பணிகளையும் தொடங்கிவிட்டனர். அதாவது போடப்பட்ட ஒப்பந்தங்களில். 64 விழுக்காடு அளவிற்கு நடைமுறைக்கு கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 40 விழுக்காடு அளவுக்கு நிறைவேற்றப்பட்டாலே பெரிய சாதனை என்று கருதப்படும் சூழலில், மாநாடு முடிந்து 9 மாதங்களுக்குள்ளாகவே நமது திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு 64 விழுக்காட்டை எட்டி இமாலய சாதனை படைத்துள்ளது.

2019-ல் வெளிநாடு போன அன்றைய முதல்வர் பழனிசாமி 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டார். 5,087 கோடி ரூபாய் முதலீடு வரும், 24,720 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார். ஆனால், இன்று வரை வெறும் 434 கோடி ரூபாய்தான் வந்துள்ளது. அதாவது 10 விழுக்காடு கூட நிறைவேறவில்லை. வெறும் 8.53 விழுக்காடு மட்டுமே நிறைவேற்றினார்கள்.

ஐக்கிய அரபு நாட்டின் பெட்ரோ-கெமிக்கல் நிறுவனத்தோடு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் இன்று வரை ஒரு பைசா கூட வரவில்லை. இதற்கெல்லாம் பழனிச்சாமி எப்போது வெள்ளை அறிக்கை வெளியிடுவார்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் புதிதாகத் தொழில் தொடங்க தகுதியுள்ள எவர் வந்தாலும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் தொழில்துறை சாதனைகளையும், ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகளையும் குறை சொல்ல, நிர்வாகத் திறனற்ற ஆட்சி நடத்திய பழனிச்சாமிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. விடியல் அரசின் சாதனைகளை நாடே போற்றுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியின் வயிற்றெரிச்சலுக்கு மருந்து கிடையாது.

இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

Tags :
ADMKcm stalinDMKedappadi palaniswami
Advertisement
Next Article