'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பாணியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் திருட்டு!
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்பட பாணியில் லண்டனில் விலையுயர்ந்த கார் வகைகளில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் இப்போது அடைந்திருக்கும் உயரத்துக்கு முக்கிய காரணம், அது வழங்கும் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் ஆகும். ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள பல்வேறு விதமான ஆப்ஷன்களை ரோல்ஸ்-ராய்ஸ் வழங்குகிறது. இதனாலேயே, பல ஆண்டுகள் கடந்த போதிலும், ரோல்ஸ்-ராய்ஸ் கார் மீதான ஈர்ப்பு அப்படியே உள்ளது.
இந்த நவீன கார்களைத் திருடுவது என்பது மிகப்பெரிய சவால். ஆனால் அப்படி ஒரு விலையுயர்ந்த காரைக் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட பாணியில் 30 விநாடிகளில் எளிதாகத் திருடிய சம்பவம் லண்டனில் அரங்கேறியுள்ளது. விலையுயர்ந்த வகை கார்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கு குறை இருக்காது என்பதை பொய்யாக்கும் வகையில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இப்போது, விலையுயர்ந்த கார்களில் உள்ள ஒரு பாதுகாப்பு சிறப்பம்சம்தான் இந்தத் திருட்டில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையை 'ரிலையிங்' என அழைக்கிறார்கள். சமீபகாலமாக அதிகமான கார்கள் திருடுபோவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். திருடப்படும் கார்கள் மத்திய கிழக்குப் பகுதிகளுக்குக் கடத்தப்படுவதாகவும், திருடப்பட்ட காரைக் கண்டுபிடிக்க முயற்சி நடந்துவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.