டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் ஷர்மா ஓய்வு!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்று தோல்வியடைந்தது. இத்தொடரில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பல கேள்விகள் எழுந்தன. இதையடுத்து வருகிற ஜூன் மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ளது.
இந்த சூழலில் இன்று(மே.07) இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமை தாங்க மாட்டார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. தொடர்ந்து இந்த டெஸ்ட் போட்டியை சுப்மன் கில் வழிநடுத்துவார் என்ற தகவலும் பரவியது.
இந்த நிலையில் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது நாட்டை வெள்ளை உடையில் பிரதிநிதித்துவப்படுத்தியதில் மகிழ்ச்சி. பல ஆண்டுகளாக நீங்கள் அனைவரும் கொடுத்த அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. நான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.
38 வயதான இவர் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக 67 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 12 சதங்கள் மற்றும் 18 அரை சதங்களுடன் 4301 ரன்கள் குவித்துள்ளார். ஏற்கெனவே ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்திருந்தார்.