ஆம்புலன்ஸ் மூலம் சென்று தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவன்!
செஞ்சி அருகே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவனுக்கு சாலை விபத்தில் காலில் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேர்வு எழுதினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரின் மகன் அஜய்குமார் (15) கொங்கரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தையூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி வந்தார்.
இந்நிலையில் இன்று சமூக அறிவியல் தேர்வு எழுதுவதற்காக கொங்கரப்பட்டு பகுதியிலிருந்து, தன்னுடைய உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் தையூர் நோக்கி சென்றுள்ளார். தொடர்ந்து தையூர் அருகே சென்ற போது அஜய்குமார் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அஜய்குமாரின் காலில் பலத்த காயமடைந்தது. அவரை மீட்டு செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த பின், அஜய்குமார் தேர்வு எழுத வேண்டும் என கூறினார். இதனையடுத்து அவர் தையூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து அவர் தேர்வு எழுதினார்.