தெலங்கானா முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி.!
தெலங்கானா முதலமைச்சராக தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ரேவந்த் ரெட்டி இன்று பொறுப்பேற்க உள்ளார்.
தெலங்கானாவின் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள்.
இதனைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி தேர்வாகக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தெலங்கானா காங்கிரஸின் மூத்த தலைவர்களான பட்டி விக்ரமார்க்க மல்லு, உத்தம் குமார் ரெட்டி ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் குதித்தனர். இதனால் தெலங்கானா அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தெலங்கான மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார். ஐதராபாத்தில் உள்ள எல்.பி. விளையாட்டு அரங்கில் இன்று மதியம் 1 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.