“தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்” - வி.கே.பாண்டியன் அறிவிப்பு!
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில், வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இதையடுத்து அங்கு 24 வருடங்களாக ஆட்சியில் இருந்த முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் படு தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்துள்ளது.
பிஜேடி கட்சியின் தோல்விக்கு முதலமைச்சரின் வலதுகையாக இருந்த தமிழர் வி. கே.பாண்டியன் தான் காரணம் என்று கூறப்படுகிறது. முன்னதாக தேர்தல் சமயங்களில் வி.கே. பாண்டியன் தான் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்று ஒரு கருத்து நிலவியது.
இதை மறுத்து பேசிய முதலமைச்சர் நவீன் பட்நாயக், எனக்குப் பிறகு ஒடிசாவை யார் ஆள வேண்டும் என்பதையும், என் அரசியல் வாரிசு யார் என்பதையும் ஒடிசா மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று கூறிய நவீன் பட்நாயக் தொடர்ந்து, வி. கே. பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது. அவர் ஒரு நேர்மையான, உண்மையான கட்சி விசுவாசி. புயல் மற்றும் பெருந்தொற்று காலங்களில் ஒடிசாவிற்கு அவரது சேவை மகத்தானது" என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து வி. கே. பாண்டியன் "நான் பதவிக்காக என் அரசுப் பணியை உதறிவிட்டு இங்கு வரவில்லை. முதலமைச்சருக்கு உதவி செய்யவே நான் அரசியலுக்கு வந்தேன். கட்சியின் தோல்விக்கு நான் தான் காரணம் என்றால், அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு, தீவிர அரசியலில் இருந்தும் விலகுகிறேன்" உருக்கமாக கூறியுள்ளார்.