’இந்தியன் வங்கி தலைவர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம்’- தமிழக எம்பிக்கள் தாக்கல்!
மதுரை எம்பி சு. வெங்கடேசன் உள்ளிட்ட மூன்று எம் பி கள் நாடாளுமன்றத்தில் இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.
09:32 PM Aug 10, 2025 IST
|
Web Editor
Advertisement
மதுரை எம்பி சு. வெங்கடேசன் உள்ளிட்ட மூன்று எம் பி கள் நாடாளுமன்றத்தில் இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,
”மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் திட்ட நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எவரையும் அழைக்காத இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), தங்க தமிழ்ச் செல்வன் (தேனி) கொண்டு வந்துள்ளனர்.
கடந்த ஜூலை 12 , 2025 அன்று ரூ 1100 கோடி அளவிலான "பெண்களுக்கு அதிகாரமளித்தல்; மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் திட்டம்" எனும் நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிதித்துறை செயலாளர் எம் நாகராஜ் அவர்கள் பங்கேற்றுள்ளார். மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்காக நடைபெற்ற இந்நிகழ்வு பற்றி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருடனும் கலந்தாலோ சிக்கவில்லை என்பதோடு அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. அப்பகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்படவில்லை.
அரசின் திட்டங்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கப்படுவதும், அவர்கள் ஈடுபடுத்தப்படுவதும், அவர்களின் ஒருங்கிணைப்பு வாயிலாக மக்கள் தொடர்பு வலுப்படுத்தப்படுவதும் மக்கள் பிரதிநிதிகளின் சிறப்புரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் இந்தியன் வங்கி இத்தகைய சிறப்பு உரிமையை அவமதித்துள்ளது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும், ஜனநாயக மரபுகளையும் மீறியுள்ள செயலாகும்.
இது மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கை அல்ல.
ஆகவே இந்தியன் வங்கி தலைவர் இடம் இத்தகைய உரிமை மீறலுக்கான விளக்கம் கோரப்பட வேண்டுமென்றும், மக்கள் பிரதிநிதிகள் அரசுத் திட்ட அமலாக்கத்தில் கலந்தாலோசிக்கப்படுவதையும், ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென்றும் கோரி மக்களவைத் தலைவர் மாண்புமிகு ஓம் பிர்லா அவர்களிடம் உரிமை மீறல் தீர்மானத்தை அளித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Next Article