தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் - செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிப்பு!
செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிப்பதற்கான ராஜினாமா கடித்தத்தை ஏற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்ததையடுத்து, ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் அவர்கள் வகித்த இலாகாக்கள் மாற்றத்திற்கான முதலமைச்சரின் பரிந்துரையையும் ஆளுநர் ஏற்றுள்ளார்.
அதன்படி செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் அண்மையில் பால்வளத்துறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அமைச்சராகிறார். அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறை சென்ற செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்ட விவகாரத்தில், பதவியா? ஜாமினா? என அவருக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பியதும், பொன்முடி சமீபத்தில் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதையடுத்து, அவர் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.