நாக் அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் டே மற்றும் பரிசுத்தொகை - ஐசிசி அறிவிப்பு!
நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்களுக்கான ரிசர்வ் டே மற்றும் தொடருக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று தற்போது நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் நாளை மும்பை வாங்டே மைதானத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா. அதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போதைய அரையிறுதியில் இந்தியா சிறப்பாக ஆடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா மோதுகின்றன. ஆஸி. அணி முதலிரண்டு ஆட்டங்களில் தோற்ற நிலையில், தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. தென்னாப்பிரிக்காவும் 7 ஆட்டங்களில் வெற்றியுடன் நுழைந்துள்ளது. முதன்முறையாக உலகக் கோப்பை இறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிகள், நவ.19ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டி ஆகியவை மழையின் காரணமாக தடைபெற நேரிட்டால் இருப்பு நாட்களில் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அரிவித்துள்ளது.
மேலும் இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும், தொடரின் வெற்றி அணிக்கு இதில் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் எனவும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரில் பங்கேற்ற 10 அணிகளுக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.