வெள்ளத்தில் 3 நாட்களாக சிக்கித் தவித்த 2 நிறைமாத கர்ப்பிணிகள் மீட்பு!
தூத்துக்குடியில் 3 நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்த 2 நிறை மாத கர்ப்பிணி பெண்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இதையும் படியுங்கள்: ‘அயலான்’ திரைப்படத்தின் 2-ஆம் பாடல் ‘அயலா அயலா’ லிரிக்கல் வெளியானது!
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே வடக்கு கோவன் காடு கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் 2 நிறை மாத கர்ப்பிணி பெண்கள் 3 நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்தனர். அங்கு தீயணைப்பு துறை மேற்கு மண்டல இணை இயக்குனர், தென் மண்டல துணை இயக்குனர்களின் தலைமையில் 25 வீரர்கள் துறை வாகனம் மற்றும் ரப்பர் படகுகளுடன் சென்றனர்.
சுமார் 8 மணி நேரம் போராடி அவர்களை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 2 கர்ப்பிணி பெண்களையும் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.