மும்பைவாசிகளிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா...ஏன் தெரியுமா?
மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத நாய்க்கு ரத்த தானம் செய்யுமாறு கோரிக்கை விடுத்து பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்புப் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராமில் மும்பையில் உள்ள தனது கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாய்க்கு ரத்த தானம் செய்பவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். அவரது பதிவில், அவர் தேவைகள் பற்றிய விவரங்களையும் பகிர்ந்துள்ளார்.
“நீங்கள் உதவுவீர்களேயானால் மனதார பாராட்டுவேன்” என்று தொடங்கும் ரத்தன் டாடாவின் அந்த பதிவில், 7 மாத வயதே உடைய இந்த நாய் காய்ச்சல் மற்றும் உயிருக்கு ஆபத்தான ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக மும்பையில் இருந்து ரத்த கொடையாளர் தேவை.
ரத்தம் வழங்கும் நாயானது 25 கிலோ நிரம்பிய 8 வயதுடைய நாயாக இருக்க வேண்டும். மேலும் அந்த நாய் அனைத்து வகை தடுப்பூசி போடப்பட்டிருப்பதோடு, கடந்த 6 மாத காலத்தில் எந்த காய்ச்சலுக்கும் ஆளானதாக இருக்கக் கூடாது என்றும் ரத்தன் டாடா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டாடா இந்த பதிவை ரத்தம் தேவைப்படும் நாயின் புகைப்படத்தோடு தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு சில மணி நேரங்களுக்கு முன்பு பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. தற்போது வரை, 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது மற்றும் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் இந்த பதிவிற்கு ஆயிர கணக்கான சமூக வலைதள பயனர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ரத்தன் டாடா துன்பத்தில் இருக்கும் நாய்க்கு உதவ சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, மீட்கப்பட்ட நாயை அதன் உரிமையாளர்களுடன் மீண்டும் இணைக்க Instagram ஐப் பயன்படுத்தினார்.
இதுமட்டுமல்லாது டாடா டிரஸ்ட்களால் சிறிய கால்நடை மருத்துவமனை ஒன்றும் நிர்வகிக்கப்படுகிறது. இது பூனைகள் மற்றும் நாய்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கால்நடை மையமாகும். அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மும்பையில் உள்ள இந்த மருத்துவமனை, சிக்கலான நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் இயங்குகிறது.