ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் - ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை!
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் தனித் தீவுகளாகவே மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும், உணவு கிடைக்காமலும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின்கீழ் இருந்த தரைப் பகுதி முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியது.
இதையும் படியுங்கள் : “அவசர நிதியாக ரூ.2,000 கோடி வேண்டும்” -பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!
இதனால், டிசம்பர் 17-ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் 500-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் சிக்கி தவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள் 10 பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனம் மூலம் மீட்கப்பட்டனர். மேலும், ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணியும் பாதுகாப்பாக மீட்டனர். ரயிலில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டர்.
இந்நிலையில், ரயிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.