“அன்புச் சகோதரர் விஜயகாந்த் பிறந்தநாளில் அவரின் சாதனைகளை நினைவுகூறுகிறேன்” - #AIADMK பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!
அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவன தலைவர், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு பொருப்புகளில் இருந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.
1970களில் மதுரையில் இருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்து சினிமா துறையில் அடிமட்டத்தில் இருந்து போராடி வாய்ப்புகளைப் பெற்று, பின் படிப்படியாக உச்ச நடிகராக ஆனவர் விஜயகாந்த். ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். தனது கொடைத் தன்மையால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஜயகாந்த்தின் 72வது பிறந்தநாள் இன்று. விஜயகாந்த் பிறந்த இன்றைய நாள் தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.