#BoilerBlast உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1கோடி நிவாரணம் - ஆந்திர முதலமைச்சர் அறிவிப்பு!
ஆந்திர மாநிலத்தில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1கோடி நிவாரணம் வழங்குவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்து ஏற்பட்டது. அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள எசியன்ஷியா (Escientia) மருந்து நிறுவனத்தில் பாய்லரில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளையில் பெரும்பாலான தொழிலாளர்கள் உணவருந்த சென்று இருந்தபோது, வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 17பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடியும், படுகாயமடைந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
"அச்சுதாபுரம் மருந்து நிறுவனத்தில் நேரிட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விசாகா மருத்துவமனையில் பார்வையிட்டேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளேன். சிகிச்சை பெற்று வருபவர்கள் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடியும், படுகாயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சமும், சிறு காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும்” என சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.