“சென்னை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி” - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...
“சென்னை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அரசின் நடவடிக்கையால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். தமிழக அரசு மீது எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர். தமிழக அரசு மீது எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர். அரசின் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. வரியை பகிர்ந்தளிப்பதில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. ரூ.6,000 நிவாரண நிதியை மத்திய அரசு வழங்குவதாக அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்கிறார். அதிமுக ஆட்சியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது 10 நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை.
அண்ணாமலை மத்திய அரசிடம் பேசி ரூ.5,000 கோடி நிவாரண தொகை பெற்று தர வேண்டும். மிக்ஜாம் புயலை தமிழக அரசு திறம்பட வென்றுள்ளது.சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையை பொறுத்தவரை அனைவருக்கும், அதாவது குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமே ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும். டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும். அடுத்த 10 நாள்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கும். மேலும், திருவள்ளூர் உள்ளிட்ட இதர மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட வட்டங்கள், பாதிக்கப்பட்ட தாலுகாக்கள் என கணக்கெடுத்து நிவாரண தொகை வழங்கப்படும்.
காஞ்சிபுரம் என்று எடுத்துக் கொண்டால், எத்தனை வட்டங்கள் பாதிக்கப்பட்டன, எத்தனை தாலுகாக்கள் பாதிக்கப்பட்டன என்பதை கணக்கெடுத்து, அந்த தாலுகா மற்றும் வட்டங்களில் அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என்றார். தற்போதைக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை குடும்ப அட்டை அடிப்படையில்தான் கணக்கெடுத்துள்ளனர். குடும்ப அட்டை இல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசுக்கு முறையீடு செய்து பெறலாம் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.