வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணத்தால் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே இன்று (ஜூலை 30) அதிகாலை 3 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த காளிதாஸ் என்பவர் கட்டிட வேலைக்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார் காளிதாஸின் உடல் மேப்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சொந்த ஊரான கூடலூருக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த திரு.காளிதாஸ் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த திரு. காளிதாஸ் அவர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.