அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று காலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்தனர். ஒவ்வொரு சுற்றுகளாக காளைகள் அவித்துவிடப்பட்ட நிலையில் சுற்றுக்கு 50 வீரர்கள் காளைகளை அடக்க களமிறக்கப்பட்டனர்.
ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அளிக்கப்பட்டன. இதில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் 19 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்தார்.
இந்த சூழலில், ஒன்பதாவது சுற்றில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் குமார் என்கிற மாடுபுடி வீரர் 406 என்கிற எண்ணில் விளையாடி வந்தார். அப்போது, வாடிவாசலில் இருந்து வந்த காளை ஒன்று நவீன் குமாரின் மார்பில் முட்டியது. இதில் படுகாயமடைந்த நவீன் குமார் அவனியாபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நவீன் குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழ்ந்த நவீன்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில்..
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.