Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூகஅநீதி" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூகஅநீதி என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11:06 AM Sep 24, 2025 IST | Web Editor
ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூகஅநீதி என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைக் கிராமங்களில் வாழும் மலையாளி பழங்குடியினர் தங்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு பழங்குடியினர் சாதிசான்றிதழ் வழங்க முடியாது என்று தமிழக அரசு மறுத்து வருகிறது. சமூகரீதியாகவும், கல்கி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மலையாளி பழங்குடியின மக்களுக்கு சமூகநீதி வழங்க திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

Advertisement

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைக்கிராமங்களான ஈரட்டி, மின்தாங்கி, எப்பதான்பாளையம், கல்வாழை, கோவில்நத்தம், எண்ணமங்கலம், மலையனூர், குரும்பபாளையம், மேடுநல்லகவுண்டன்கொட்டாய், காளிமலை உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளி பழங்குடியின குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பல தலைமுறையாக பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்களால் கல்வி கற்கவோ, அரசு வேலைக்கு செல்லவோ முடியவில்லை. அதனால், சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட அவர்கள் முன்னேற முடியாமல் தவிக்கின்றனர்.

அவர்களின் சமூகநீதிக் கோரிக்கை குறித்து எடுத்துக் கூறியும் எந்த அதிகாரியும் அவருக்கு சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். இது அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக அமைகிறது. பழங்குடியின மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் வகை செய்தார். ஆனால், அதை மதிக்காமல் பழங்குடியின மக்களின் சமூகநீதிக்கு எதிராக பெரும் கூட்டம் சதி செய்கிறது.

மலையாளி பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்றுகள் வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. பழங்குடியினர் சாதிப்பட்டியலின் 25 ஆம் இடத்தில் மலையாளி பெயர் இடம்பெற்றுள்ளது. அவர்கள் தருமபுரி, சேலம், நாமக்கல், வேலூர், கரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வாழ்பவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை மட்டும் உறுதியாகப் பிடித்துக் கொண்ட அதிகாரிகள், பிற மாவட்டங்களில் வாழும் மலையாளிகளுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். இது நியாயமல்ல.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதிகளில் வாழும் மலையாளிகள் தான். பிரிக்கப்படாத ஈரோடு மாவட்டத்தை உள்ளடக்கியிருந்த கோவை மாவட்டத்தின் 1887-ஆம் ஆண்டு அரசிதழில் இது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பர்கூர் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் சேர்வராயன்மலை மற்றும் கொல்லிமலையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும், அங்கிருந்து அவர்கள் பர்கூர் மலைக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தின் 1918ஆம் ஆண்டு அரசிதழில் பவானி வட்டத்தில் பாலமலை, பர்கூர்மலை, காளிமலைப் பகுதியில் கொல்லிமலையை சேர்ந்த பழங்குடியினர் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது.

பர்கூர் மலையின் பாலமலையில் வாழும் மலையாளி மக்களுக்கு சாதி சான்று வழங்கும் அதிகாரிகள், மற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்க மறுக்கின்றனர். இது பெரும் சமூக அநீதி ஆகும். இது தொடரக்கூடாது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளி மக்கள் தான் ஈரோடு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள் என வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அதை மதித்து பர்கூர் பகுதியில் வாழும் மலையாளி பழங்குடியின மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் சமூகநிலையிலும், கல்வியிலும் முன்னேற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Anbumani Ramadosscaste certificatesErodePMKsocial injusticetribals
Advertisement
Next Article