#Refund பாலிசி முறையை மாற்ற வேண்டும்… பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும் - ஓலாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு ரசீது கொடுக்க வேண்டும் என ஓலா நிர்வாகத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற மொபைல் செயலிகள் கார், ஆட்டோ, பைக், டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் கார், ஆட்டோ உரிமையாளர்களை ஒருங்கிணைத்து, ஒரே தளத்தில் தங்களுக்கு அருகில் இருக்கும் வாகனங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ள பயணிகளுக்கு உதவுகின்றன. நாடு முழுவதும் பல நகரங்களில் இந்த மொபைல் செயலிகள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த செயலிகளின் மீது அவ்வப்போது பல புகார்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஓலா ஆட்டோ மற்றும் கார்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும், திரும்ப செலுத்த வேண்டிய தொகைக்கு வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கு உள்ளிட்ட வழி முறையை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, வாடிக்கையாளர் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறும்போது நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட வேண்டுமா அல்லது கூப்பன் வழியாக ரீ ஃபண்ட் பெற வேண்டுமா என்பதை தேர்வு செய்ய அனுமதிக்கும் வழிமுறையை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்பு ஓலாவில் அட்வான்ஸாக செலுத்திய பணத்தை திரும்ப பெற கூப்பன் வவுச்சர் முறையை மட்டுமே அந்நிறுவனம் வழங்கி வந்தது. கூப்பனை அடுத்த சவாரியின் போது பயன்படுத்தி கொள்ளலாம் என்றாலும் இது நுகர்வோர் உரிமையை மீறுவதே ஆகும். அதுபோல ஓலாவில் இதுவரை நாம் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என பார்க்க முயன்றால், கட்டணப்பட்டியல் வழங்கப்படாது என்னும் குறுஞ்செய்தி வரும். கட்டணப்பட்டியலை நாம் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில்தான் ஓலா, பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும் எனவும், பணம் திரும்ப பெறும் முறையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விவரங்கள் அடங்கிய ரசீது அல்லது விலை விவரப் பட்டியல் வழங்காமல் இருப்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் 'நியாயமற்ற வர்த்தக நடைமுறை' என்று கூறப்பட்டுள்ளது.