Red Velvet or Red Alert? | கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் - உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி!
கர்நாடகாவில் உள்ள சில பேக்கரிகளில் விற்கும் கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் சில கெமிக்கல்கள் இருப்பதாகக் கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், பானி பூரி, கேபாப் உள்ளிட்ட ஸ்ட்ரீட் புட்களில் கார்சினோஜென்ஸ் எனப்படும் ஆபத்தான கெமிக்கல் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இப்போது கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை பேக்கரியில் விற்கப்படும் கேக் குறித்தும் கவலை எழுப்பியுள்ளது. ரெட் வெல்வெட் மற்றும் பிளாக் பாரஸ்ட் போன்ற கேக்குகள் தான் பெரும்பாலும் அதிகளவில் செயற்கை வண்ணங்களுடன் தயாரிக்கப்படுவதால் அதுவே அதிக ஆபத்தானதாக உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதையடுத்து, கேக்குகளில் செயற்கை நிறமூட்டிகளை சேர்க்கும் பேக்கரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கர்நாடக மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் ஏற்கனவே பஞ்சு மிட்டாய்களில் நிறமூட்டிகள் சேர்க்கப்படுவது சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து, தற்போது கேக்குகள் குறித்து பிரச்னை எழுந்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சுமார் 235 கேக் மாதிரிகளை ஆய்வு செய்தோம். அதில் 223 கேக் மாதிரிகள் பாதுகாப்பாக இருந்தன. ஆனால் 12 கேக்குகளில் செயற்கை வண்ணங்கள் ஆபத்தான அளவில் இருந்தன. குறிப்பாக Allura Red (ஒரு வகை சிவப்பு), சன்செட் மஞ்சள், ஸ்ட்ராபெரி சிவப்பு, எலுமிச்சை மஞ்சள் மற்றும் மரூன் போன்ற செயற்கை நிறங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கூறுகையில், "பொதுவாக இதுபோன்ற செயற்கை கலர்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்புத் துறை பரிந்துரை அது தான். இந்த கெமிக்கல்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போதே பிரச்னை வருகிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் நாம் சாப்பிடும் கேக்கில் கெமிக்கல் கலர் அதிகமாக இருக்கிறதா இல்லை சரியாக இருக்கிறதா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.
பார்க்க கேக் பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கிறது என்பதற்காக வாங்கி சாப்பிட்டால் அது உங்கள் உடல்நிலையை கெடுத்துவிடும். மக்கள் இதுபோல இருக்கும் கேக்குகளை விரும்புவதால் செயற்கை வண்ணங்களை அதிகம் சேர்க்கிறார்கள். பேக்கிங் செய்யப்பட்ட பல உணவுகளில் டைட்டானியம் டை ஆக்சைடு உள்ளது. இது நமது உடலுக்கு ஆபத்தானது. இந்தியாவில் இதைப் பயன்படுத்த அனுமதி உள்ள போதிலும் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார்கள்.