கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் - விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள பவான், நொய்யல் ஆகிய ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சூழலில் இன்றும்(மே.26) கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழ்நாட்டின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும் எனவும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை கோவை விரைந்துள்ளனர்.