"ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்பு" - உக்ரைன் அதிபர் தகவல்!
ரஷ்ய ராணுவத்தால் இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் கார்கிவ் பிராந்தியப் பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடுமீர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன.
பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது. இருப்பினும் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களான டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சான், ஸபோரிஷியா ஆகியவற்றின் கணிசமான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இதனிடையே வடகிழக்குப் பிராந்தியமான கார்கிவிலும் ரஷ்ய படையினர் கடந்த 10-ம் தேதி முதல் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வந்தனர்.
இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தால் இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் கார்கிவ் பிராந்தியப் பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடுமீர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கார்கிவ் பிராந்தியத்தின் சில எல்லைப் பகுதிகள் நமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதற்கு முன்னர் அந்தப் பகுதிகளுக்குள் ஆக்கிரமிப்புப் படையினர் நுழைந்திருந்தனர்” என தெரிவித்தார்.
இருப்பினும், கார்கிவ் நிலவரம் குறித்து ரஷ்ய தரப்பினர் கூறும் தகவல் இதற்கு முரணாக உள்ளது. இதுகுறித்து ரஷ்ய நாடாளுன்ற உறுப்பினர் விக்டர் வொடோலட்ஸ்கி, தங்கள் எல்லைக்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள வாவ்சான்ஸ்க் நகரில் பாதியை ரஷ்ய படையினர் கைப்பற்றியுள்ளதாகக் கூறினார். அந்த நகரை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு அருகிலுள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தின் ஸ்லோவியான்ஸ்க், க்ரமடார்ஸ்க், போக்ரொவ்ஸ்க் ஆகிய நகரங்களைக் கைப்பற்றுவதற்காக ரஷ்ய ராணுவம் முன்னேறிச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.