”ஓபிஎஸ் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யத் தயார்” - நயினார் நாகேந்திரன்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 'அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற அமைப்பை உருவாக்கி, தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தூத்துக்குடி வந்த பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதினார். ஆனால் அவருக்கு நேரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கல்வி உதவித் தொகை தொடர்பாக மத்திய அரசை அவா் விமர்சித்தார்.
இந்நிலையில் நேற்று, சென்னையில் அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக உரிமை மீட்புக்குழு விலகுவதாக அறிவித்தார். மேலும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், “கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசிகொண்டுதான் இருந்தேன். ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியது சொந்த பிரச்சனையா அல்லது வேறு காரணமா என தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும் ,ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்டுக் கொண்டால் வரும் 26 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்ய தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.