ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட 'வாரணம் ஆயிரம்' - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'வாரணம் ஆயிரம்' திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு 'வாரணம் ஆயிரம்' திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் அப்பா - மகனுக்கு இடையேயான உறவின் நெருக்கத்தையும், வாழ்க்கைப் பிரச்னைகளுடனும் இணைத்து உருவாக்கப்பட்டது.
இப்படத்தில் அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரத்திலும் சூர்யாவே நடித்து அசத்தியிருந்தார். இவர்களுக்கு ஜோடியாக சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளோடு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள் : ‘ஆபத்தானது, வெட்கக்கேடானாது’ – வீடியோ எடுத்த ராகுல் காந்தியை சாடிய ஜகதீப் தன்கர்!
இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இன்றும் நீடிக்கிறது. காதல், அதன் பிரிவு என உணர்ச்சிகளின் வேகத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த விதத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.
சமீபத்தில் முத்து, ஆளவந்தான், 3, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற பல பழைய படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 'வாரணம் ஆயிரம்' திரைப்படம் தமிழ்நாட்டில் பல்வேறு திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. முதலில் சென்னையில் மட்டும் வெளியான இந்த படம் ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்ததால் தமிழ்நாட்டில் பல்வேறு திரையரங்குகளிலும் வெளியானது.
திரையரங்கில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரைக்கு முன் ஆடி தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த வார இறுதி வரை டிக்கெட்களும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.