#RatanTata | மகாராஷ்டிர பல்கலை.க்கு ரத்தன் டாடா பெயர் - அமைச்சரவை ஒப்புதல்!
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயரை மகாராஷ்டிர பல்கலைக்கழகத்துக்கு வைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிர திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்துக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயரை வைக்க மகாராஷ்டிர அமைச்சரவை இன்று (அக். 14) ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மும்பை நகருக்குள் உள்நுழையும் சாலைகளில் உள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள மகாராஷ்டிர திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயரை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி வருகின்றது. ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த வாரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த சனிக்கிழமை மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கிற்கு இரங்கல் தீர்மானம் உள்பட 150 முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.