மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் ரத்தன் டாடாவின் உடல்... #Maharashtra -வில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!
ரத்தன் டாடாவின் மறைவையொட்டி, மஹாராஷ்டிராவில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டாடா குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். ரத்தன் டாடாவின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வேதனையளிக்கும் செய்தியாக மாறியுள்ளது. ஒரு தொழில் தலைவராக மட்டுமின்றி, மனிதநேயமிக்க மனிதராகவும் பார்க்கப்பட்டவர் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவின் மறைவிற்கு உலகத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்குக்கு கொண்டு வரப்படும் ரத்தன் டாடாவின் உடலுக்கு காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
ரத்தன் டாடாவின் தைரியமான அணுகுமுறை மற்றும் சமூக அர்ப்பணிப்புக்காக அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.