வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு!
வேளாண் பட்டப்படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார்.
இந்த தரவரிசை பட்டியலில் திவ்யா என்ற மாணவி முதல் இடத்தையும், சர்மிளா என்ற மாணவி 2வது இடத்தையும், மாரீன் என்ற மாணவர் 3வது இடத்தையும், நவீன் என்ற மாணவர் 4வது இடத்தையும் பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் அனைவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட நிலையில் 29, 969 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்படி, இந்த ஆண்டு 11,447 மாணவர்களும் 18,522 மாணவிகளும் விண்ணப்பத்திருந்தனர்.
இதனையடுத்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்க துணைவேந்தர் கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாடு அரசின் 7.5% இட ஒதுக்கீடு பெற விரும்பி பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு வேளாண் படிப்புகளில் சேர மாணவர்களிடம் போட்டி அதிகரித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்றே முடிந்துவிடும்.
வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆன்லைன் கவுன்சிலிங் நடைபெறும். இந்த முறை தொழில் முறை கல்விக்கும் ஒரு நல்ல வரவேற்று இருக்கிறது. இந்த முறை 6400 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக விண்ணப்பித்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.