#Uttarakhand சிறையில் நடந்த ராமாயண நாடகம்.. சீதையை தேடுவதுபோல் தப்பியோடிய கைதிகள்!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறையில் ராமாயண நாடகம் நடைபெற்ற நிலையில், குரங்குகளாக வேடமிட்டு சீதையை தேடுவதுபோல் நடித்து கைதிகள் தப்பியோடிய நிகழ்வு நடந்தேரியுள்ளது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அனுமானின் வானர சேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டு நடித்த இரண்டு கைதிகள் சீதையை தேடுவதுபோல் காட்சிக்கு வெளியே சென்றுள்ளனர். ஆனால் சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை. அதன்பிறகே அவர்கள் தப்பியோடியதைச் சிறை அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையிலிருந்த பங்கஜ் என்பவரும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த ராஜ்குமார் என்பவரும் இணைந்து சிறையிலிருந்து தப்பிக்க வெகு நாட்களாகத் திட்டம் தீட்டி வந்ததாகத் தெரிகிறது.
சிறையில் நடக்கும் நவராத்திரி ராம்லீலா நாடகத்தை சரியான வாய்ப்பாக கருதிய அவர்கள் குரங்கு வேடமிட்டு சீதையைத் தேடச் செல்லும் காட்சியில் நைசாக நழுவி கட்டுமானப்பணிக்காகச் சிறையில் வைத்திருந்த ஏணியைப் பயன்படுத்தி சிறைச் சுவரைத் தாண்டி வெற்றிகரமாகத் தப்பித்துள்ளனர். இந்நிலையில், தற்போது அவர்களை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது.