ராமநாதபுரம் - ஐயப்ப பக்தர்கள் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவில் இருந்து ஐந்து ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரதரதில் சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் ராமேஸ்வரம் நோக்கி வந்துள்ளனர். அப்போது அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அருகே காரை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்துள்ளனர்.
இந்த நிலையில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரை நோக்கி 7 பேருடன் வந்த கார் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கீழக்கரையைச் சேர்ந்த 6 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீசார் விபத்தில் உயிரிழந்த கீழக்கரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முஷ்டாக் அகமது (30), ஆந்திராவை சேர்ந்த ராமச்சந்திர ராவ் (55), அப்பாரோ நாயுடு(40), பண்டார சந்திரராவ் (42), ராமர் (45) ஆகிய ஐந்து பேரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.