'மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை' - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!
சென்னையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர்,மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் போர் நினைவுச்சின்னம் அருகில் உள்ள அன்னை சத்யா
நகரில் நடைபெறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினையும், கொசுத் தடுப்பு
நடவடிக்கைகளையும், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது;
"மழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு ஏற்படும் நோய் பரவலை தடுப்பதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் இருக்க கூடிய பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இதுவரை 9,969 மருத்துவ முகாம்கள் சென்னையில் நடந்துள்ளது, அதில் 5 லட்சத்து 64
ஆயிரம் பேர் மருத்துவ முகாம்களில் பயன் அடைந்துள்ளனர். சென்னையில் மழை வெள்ளத்திற்கு பிறகு எந்த தொற்று நோயும் பரவவில்லை என்றும் பொதுமக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள 35 ஆயிரம் சாலைகளில் 3,273 இடங்களில் பள்ளத்தை
கண்டறிந்துள்ளோம். இதுவரை 4162 சாலை பள்ளங்கள் மூடப்பட்டுள்ளது. மீதமுள்ள 5
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 23 ஆம்
தேதி வரை 1.38 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் சென்னையில் அகற்றப்பட்டுள்ளது.
சென்னையில் 66 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 14 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றின் வீரியம் இல்லை. சென்னையில் உள்ள மக்களுக்கு சுத்தமான பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனை அதிகாரிகள் களத்தில் ஆய்வு செய்து உறுதி செய்கின்றன"
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.